திருச்சியில் திமுக பத்தாவது மாநில மாநாடு. மாநாட்டுக் கொடிக்கம்பம் திமுக தலைவர் கருணாநிதியின் வயதையொட்டி 90 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. மாநாட்டுக்கொடி ஏற்றுவதற்கு கொஞ்ச நேரம் முன்பாக கொடியை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பரிசோதித்தபோது அதிர்ச்சி. கொடிக்கயிறு சுமார் 70 அடி உயரத்தில் கொக்கியில் சிக்கிக்கொண்டது. கொடியை ஏற்றினால் அது ஏறாது; பாதியிலேயே நின்றுவிடும். பதற்றத்துடன் ஒரு ஏணியை எடுத்து வந்தனர். அதுவோ 15 அடி உயரம்தான். என்ன செய்வது என்று மாநாட்டு அமைப்பாளர்கள் கையைப் பிசைந்தபோது,எங்கிருந்தோ வந்தார் அந்த தொண்டரணி இளைஞர் தும்பல் ரமேஷ். தரையில் அரை அடிக்கும் மேலாக விட்டம் கொண்ட அந்த கம்பம் மேலே செல்லச்செல்ல குறுகும். புதுப் பெயிண்ட். வழுக்கும். ரமேஷ் அந்த கொடிமரத்தின் மீது அணிலைப் போல் தாவி கணப்பொழுதில் 70 அடி உயரத்தை அடைந்து, கொடிக் கயிறை கொக்கியில் இருந்து விடுவித்து, விறுவிறுவென்று இறங்கி கூட்டத்தில் காணாமல் போனார்.
கலைஞர் வந்து காரில் இருந்தே கொடியை ஏற்ற கயிறை இழுத்துவிட்டு, ஸ்டாலினிடம் கொடுக்க, மீதி உயரத்துக்கு ஸ்டாலினே ஏற்றிவைத்தார். மாநாட்டில் பேசுகையில் இதைச் சுட்டிக்காட்டி திக தலைவர் வீரமணி சொன்னார்: “ஸ்டாலின் மீதிக்கொடியை ஏற்றியதில் அர்த்தம் இருக்கிறது”.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்தது இந்த மாநாடு. அதை அடுத்து செப்டம்பரில் நிகழ்ந்த முப்பெரும் விழாவில் கட்சித் தொண்டர்களிடம் ஓர் எதிர்பார்ப்பு இருந்தது. ஆகஸ்டு மாதமே அதற்கான விதையைத் தூவி கட்சிப் பதவியைப் பறிகொடுத்திருந்தார் அமைப்புச்செயலாளராக இருந்த கல்யாணசுந்தரம். அவர் கட்சித் தலைமைக்கு எழுதிய கடிதத்தில், 2016 சட்டமன்றத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக மு.க. ஸ்டாலினை அறிவிக்க வேண்டுமென்றும், கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் கட்சியிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். தவிர, சமீபத்தில் தி.மு.கவில் புதிதாக பிரிக்கப்பட்ட 65 மாவட்டங்களுக்கும் உடனடியாக பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் நில அபகரிப்புப் புகார், சொத்துக் குவிப்பு வழக்கு ஆகியவற்றில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எந்த முக்கியப் பொறுப்பும் வகிக்கக் கூடாது என்றும் அவர் அந்தக் கடிதத்தில் கூறினார். இதையடுத்து கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதாக அறிவதால், தி.மு.கழக அடிப்படை உறுப்பினர் உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அவரை தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார்.
ஸ்டாலினே 2016 தேர்தலில் முதல்வர் என்று அறிவிக்ககோரி திமுக தொண்டர்கள் வைத்த கோரிக்கைகள் 2014 செப்டம்பர் முப்பெரும் விழா வரைக்கும் இணைய தளம் உட்பட பல்வேறு மையங்களில் எதிரொலித்துக்கொண்டே இருந்தன. கல்யாணசுந்தரம் எழுதிய கடிதம் இதன் உச்சம் எனலாம். ஆனால் திமுக முப்பெரும் விழாவில் ஸ்டாலின் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 2016-ல் கலைஞர்தான் முதல்வர் என்று விழாவில் பேசியதுடன் இன்றுவரை அந்த நிலைப்பாட்டை பல்வேறு முறை கூறிவிட்டார்.
ஆனாலும் இந்த கோரிக்கை திமுகவின் சமீபத்தைய உட்கட்சித் தேர்தலில் வேறுவடிவம் பெற்றது. பொருளாளர் என்ற பதவியில் இருக்கும் ஸ்டாலினுக்கு அதைவிட உயர்ந்த பதவி வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக செய்திகள் ஊடகங்களில் கசிந்தன. ஆனாலும் பல்லாண்டுகள் அரசியலில் அனுபவம் பெற்றவரான கலைஞர் இதை மிகு எளிதாகச் சமாளித்தார். ஸ்டாலின் ஆதரவாளர்களாக நீண்டகாலம் கட்சிப் பொறுப்புகளில் இருந்தவர்களிடம் ஒரு பொறுப்பு போதும், வேறு பதவிக்குப் போட்டியிட எதிர்காலத்தில் கேட்க மாட்டோம் என்று எழுதி வாங்கிக்கொண்டார். பேராசிரியர் அன்பழகனிடம் ஸ்டாலின் சார்பில் ஒருவர் சென்று பொதுச்செயலாளர் பதவியை ஸ்டாலினுக்காக விட்டுக்கொடுக்குமாறு கேட்டதாகவும் அதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வந்தன. திடீரென பொதுக்குழுவுக்கு முன்னால் ஸ்டாலின் கட்சிப்பதவியை ராஜினாமா செய்ததாகவும் அதையும் கலைஞர் ஒரு குழந்தை விளையாட்டாக எதிர்கொண்டு சமாளித்ததையும் பற்றி வண்டி வண்டியாக தகவல்கள் வந்துகொண்டே இருந்தன. அவை அனைத்தும் கசப்பான தகவல்தான்.
ஏன் ஸ்டாலினை 2016 சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக இப்போதே அறிவித்து விடக்கூடாது? பொருளாளர் என்ற பதவியை விட மேம்பட்ட பதவியை ஸ்டாலினுக்கு இப்போது கொடுத்துவிடக்கூடாதா?
90 வயதைக் கடந்த நிலையில் இன்னும் கலைஞரும் பேராசிரியரும் கட்சிப் பதவியில் ஒட்டிக்கொண்டுதான் இருக்கவேண்டுமா?
“இதற்கான பதில்களைச் சொல்லவேண்டியவர்கள் தலைவரும் பொதுச்செய லாளரும்தான். கட்சியின் எல்லா மட்டத்தில் இருந்தும் முணுமுணுப்புகள் எழுந்துவிட்டன. அவற்றை தலைவர் இன்று வெற்றிகரமாகச் சமாளித்திருக்கலாம். ஆனால் ஸ்டாலின்? இந்த மார்ச் 1 ஆம் தேதி அவருக்கு 63 வயது ஆகிறது. ஓட்டுநர் இருக்கையில் இருப்பவர்களுக்கு கை நடுக்கம் இருக்கக்கூடாது. கை நடுக்கம் வருவதற்கு முன்பே அந்தப் பொறுப்பு மற்றவருக்கு அளிக்கப்பட்டுவிட வேண்டும். இன்று தலைவருக்கு கை நடுங்குகிறது. அதற்குக் காரணம் இருக்கிறது. அவரது பெரிய குடும்பம். அதன் மீது இயல்பாக எழும் பாசம். சென்ற சட்டமன்றத் தேர்தலில் தோற்றதற்கே முழுமுதல் காரணமாக இருந்தது குடும்ப ஆதிக்கம்தான் என்பது எல்லோருக்கும் தெரியும்.
இன்றைக்கு கட்சியின் தோல்விக்காகக் கைகொட்டி மகிழ்ந்த தலைவரின் குடும்ப உறுப்பினர் மீண்டும் கட்சிக்குள் வந்துவிடுவாரோ என்ற அச்சத்திலேயே ஸ்டாலின் முதல் எல்லா கட்சி உறுப்பினர்களும் இருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் ஸ்டாலின்தான் என்று முடிவு செய்து அவரது கையில் பொறுப்பை ஒப்படைத்துவிட்டால் பரந்துபட்ட குடும்ப ஆதிக்கம் குறையும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. ஆனால் தலைவர் வேறெதோ கணக்குப் போடுகிறார். தேசிய அரசியலில் முலாயம் சிங் யாதவுக்கும் ஃபரூக் அப்துல்லாவுக்கு இருந்த தொலைநோக்கை இங்கே சுட்டிக்காட்டத் தோன்றுகிறது” என்று அந்திமழையிடம் கூறுகிறார் பெயர் சொல்ல விரும்பாத திமுக பிரமுகர் ஒருவர்.
வேறு சில திமுக பிரமுகர்களிடம் பேசியதில் தொகுத்தவை:
1) கட்சிக்குள் மாவட்டங்களைப் பிரித்ததன் மூலம் புதிய ஆட்களுக்கு பதவி கொடுத்தாகிவிட்டது. தலைமையில் புதிய சிந்தனைகள், அணுகுமுறைகளுக்கு இடம் கொடுக்கக் கூடாதா?
2) கட்சிகள் பெரு நிறுவனங்கள் போல் தங்கள் செயல்பாட்டை மாற்றி வரும் காலம் இது. வயது முதிர்ந்த தலைவர்கள் செயல்படும் பொறுப்பில் இருந்து விலகி பெரு நிறுவனங்களில் நடப்பதுபோல் ஆலோசனைப் பதவிகளை வகிக்கலாமே? ஏன் செய்யக்கூடாது.
3) ஸ்டாலினிடம் தனிமனிதர்களுக்கு உரிய குற்றங்குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் பொறுப்புக்கு வந்தபின்னர் அவர் இன்னும் திறம்பட செயல்படக் கூடும். ஆளுங்கட்சியை பல்வேறு ஊழல்களிலும் குறைகளிலும் விமர்சிக்கும் போது எதைச் சொன்னாலும் திமுகவில் ஒருவர் மீது அதற்கு ஈடான புகார்ப்பட்டியல் வாசிக்கமுடிகிறது. ஆனால் ஸ்டாலின் மீது அப்படி எதையும் வைக்க முடியாது. யாரையும் விரல் காட்டி அவர் பேசலாம்.
4) ஸ்டாலின்தான் அடுத்த தலைவர், முதல்வர் என்று வெளிப்படையாகச் சொல்லவில்லையே தவிர 2000-ஆம் ஆவது ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் இதுதான் என் கடைசித் தேர்தல் என்று சொன்னதாகட்டும். ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி தந்ததாகட்டும். அவர்தான் அடுத்தது என்பது நிறுவப்பட்டுவிட்டது. அதை, அவர் இன்றைக்கே தாத்தாதான் என்றாலும் இளைய தாத்தாவாக இருக்கும்போதே கொடுத்தால்தான் என்ன?
5) உன் கோவணத்தைக் களவாடியவனிடம் கெஞ்சிக் கொண்டிருக்காதே; நிர்வாணமாகப் போராடு என்றொரு காசி ஆனந்தனின் கவிதை வரி உண்டு. ஸ்டாலின் தனக்கு உரியதை உறுதியாக நின்று பெறுவதில் சுணக்கம் காண்பிக்க வேண்டியதில்லை. இன்றைக்கு ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கும் மாநிலம் முழுக்க செல்வதற்கும் ஸ்டாலின் தான் தேவைப்படுகிறார். இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தலைவர்களிடமும் நல்லுறவு பேணுபவராகவும் அவரே இருக்கிறார். பிறந்த நாளின்போது ஏராளமான தலைவர்களும் கலையுலகப் பிரமுகர்களும் வாழ்த்துச் சொல்லும் ஆளுமையாக அவர் மாறி வெகுநாள் ஆகிறது.
“2016-ல் ஆட்சிப்பொறுப்பேற்றால் ஸ்டாலின் தான் முதல்வர் என்பதை அறிவித்துவிடுதல் இன்றே நல்லது. ஏனெனில் கட்சிக்குள் அனாவசியக் குழப்பங்களும் போட்டியாளர்களால் அச்சங்களும் ஏற்படுவதை அது தவிர்க்கும்” என்பதே ஸ்டாலின் ஆதரவாளர்களின் தனிப்பட்ட கருத்தாக இருக்கிறது. கட்டுரையில் ஆரம்பத்தில் பார்த்ததுபோல கொடிக்கம்பத்தில் ஏறிய தொண்டர்கள் இன்னும் மிச்சமிருக்கிறார்கள். அவர்களின் உழைப்புக்கும் நம்பிக்கைக்கும் இதுவே மரியாதை.
பிப்ரவரி, 2015.